பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலி: ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு உறவினர்கள் போராட்டம்
ஆர்.கே. பேட்டை அருகே பள்ளி சுவர் இடிந்து விழுந்து 7-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.;
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் கொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார். இவரது மகன் மோகித் (வயது 12). அதே கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளியில் அரையாண்டு தேர்வுகள் நடந்து வரும் நிலையில் நேற்று காலை பள்ளிக்கு சென்ற மாணவன் மோகித் தேர்வு எழுதி முடிந்ததும் அங்குள்ள நடைபாதை கைப்பிடி சுவர் அருகே அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
அப்போது திடீரென்று கைப்பிடி சுவர் இடிந்து மோகித் மீது விழுந்தது. இதில் மோகித் தலையில் பலத்த காயமடைந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தான். தகவல் அறிந்ததும் மோகித்தின் பெற்றோரும், உறவினர்களும், கிராம மக்களும் அந்த பள்ளிக்கு சென்று மாணவன் மோகித்தின் உடலை வாங்க மறுத்து தங்களுக்கு நியாயம் வேண்டும் என்று அவர்கள் அங்கு மறியல் செய்தனர்.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆர்.கே. பேட்டை போலீசாரும், வருவாய்த்துறையினரும் மாணவரின் பெற்றோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களை அமைதிப்படுத்தினர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆர்.கே. பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் மாணவரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு, உயிரிழந்த மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், அஜாக்கிரதையாக செயல்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இந்நிலையில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக பள்ளியின் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் உயிரிழந்த சம்பவத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன், மாணவரின் குடும்பத்துக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.