60 அடி உயர ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்தவர் காயங்களுடன் மீட்பு

மதுகுடித்த போது 60 அடி உயர ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்தவர் காயங்களுடன் மீட்கப்பட்டார். அவர் விடிய, விடிய உயிருக்கு போராடினார்.

Update: 2023-01-25 18:45 GMT

குழித்துறை:

மதுகுடித்த போது 60 அடி உயர ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்தவர் காயங்களுடன் மீட்கப்பட்டார். அவர் விடிய, விடிய உயிருக்கு போராடினார்.

காயங்களுடன் கிடந்த ஆண்

குழித்துறையில் இருந்து மேல்புறம் நோக்கி செல்லும் சாலையில் களுவன்திட்டை சந்திப்பு பகுதியில் ஒரு ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலம் 60 அடி உயரம் கொண்டது ஆகும்.

இந்த பாலத்தின் கீேழ தண்டவாளத்தில் நாகர்கோவில்-திருவனந்தபுரம் வழியாக இயக்கப்படும் ரெயில்கள் செல்கிறது. இந்தநிலையில் நேற்று காலை அந்த தண்டவாளத்தின் அருகில் புதர் நிறைந்த பகுதியில் ஒரு ஆண் பலத்த காயங்களுடன் கிடப்பதாக குழித்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. உடனே நிலைய அதிகாரி சந்திரன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

அங்கு சென்ற போது தண்டவாளம் அருகே உள்ள ஓடையில் ஒருவர் காயங்களுடன் கிடந்தார். உடனே கயிறு கட்டி மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதனை தொடர்ந்து ஸ்டிரெச்சரில் அவரை தூக்கி வைத்தபடி 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குழித்துறை மேற்கு ெரயில் நிலையம் பகுதி வழியாக மேலே சாலைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் ரெயில்வே போலீசாரும் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பாலத்தில் இருந்து தவறி விழுந்தார்

விசாரணையில், காயங்களுடன் கிடந்தவர் மருதங்கோடு ஐக்கிரி விளையை சேர்ந்த நேசமணி மகன் சிங் (வயது 45) என்பதும், அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

களுவன் திட்டை ரெயில்வே பாலத்தில் அமர்ந்து மது குடித்த போது தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். இதனால் அவர் எழுந்து நடக்க முடியாமல் தண்டவாள பகுதியில் காயங்களுடன் கிடந்துள்ளார். காலை நேரத்தில் கஷ்டப்பட்டு எழுந்து நடந்து சென்ற போது ஓடையில் விழுந்ததும் தெரியவந்தது. பாலத்தில் இருந்து தவறி விழுந்ததில் படுகாயங்களுடன் விடிய, விடிய அவர் உயிருக்கு போராடியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் படுகாயமடைந்த சிங்கிற்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்