அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி

ஜோலார்பேட்டையில் உள்ள சிறுவிளையாட்டு அரங்கில் பள்ளி மாணவர்களுக்கான தற்காப்பு கலை பயிற்சியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.;

Update:2023-03-18 00:12 IST

தற்காப்பு கலை பயிற்சி

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தற்காப்பு கலைகளான கராத்தே, சிலம்பம், டேக்வாண்டோ, ஜூடோ உள்ளிட்ட தற்காப்பு கலை பயிற்சி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் க.நந்தகுமார் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, வில்வநாதன், அ.நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு தற்காப்பு கலை பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பாதுகாப்பை உறுதி செய்ய

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா காலகட்டத்திலும், அதனைத் தொடர்ந்து பயத்தின் காரணமாகவும் மாணவ-மாணவிகளின் இடைநிற்றலை தடுக்க இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், புதுமைப்பெண் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், காலை உணவு திட்டம், வானவில் மன்றம், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் நலன் காக்க மொழிகள் ஆய்வகம், நம் பள்ளி -நம் பெருமை போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அதனைத் தொடர்ந்து இன்று (நேற்று) 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ஏற்படுகின்ற பயத்தினை போக்கவும், அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் மூன்று மாத காலத்திற்கு தற்காப்பு கலை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. 100 மாணவிகளுக்கு ஒரு பயிற்சியாளர் வீதம் வாரத்திற்கு இரண்டு நாட்கள் ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 100 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை ஒன்றாக இணைத்து அங்கேயே பயிற்சியாளரை நியமித்து மாணவிகளுக்கு தற்காப்பு கலைகள் பயிற்சி அளிக்கப்படும்.

4,791 பேருக்கு...

திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 ஒன்றிய பகுதிகளில் உள்ள 160 பள்ளிகளில் 4,791 மாணவிகளுக்கு இந்த தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் மாணவ- மாணவிகள் மன தைரியத்துடன் எந்த ஒரு பிரச்சினைகளையும், சவால்களையும் எதிர்கொண்டு எதிர்காலத்தில் நல்ல ஒரு வீரமங்கைகளாக வளர்வதற்கு இந்த பயிற்சி அமையும்.

இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு மாதத்திற்கு ரூ.5 ஆயிரம் வீதம் 3 மாதத்திற்கு ரூ.15 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் மூன்று மாத காலம் இந்த பயிற்சி நடத்துவதற்கு ரூ.24 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள் அறிவொளி, லதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரா.மதன்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர். சூர்யகுமார், மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி, ஜோலார்பேட்டை ஒன்றியக் குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார், நகர செயலாளர் ம.அன்பழகன், நகர மன்ற தலைவர் காவியா விக்டர், ஒன்றிய கவுன்சிலர் உமா கன்ரங்கம், நகர மன்ற துணைத் தலைவர் இந்திரா பெரியார்தாசன், மாவட்ட கல்வி அலுவலர்கள் எஸ்.ராஜா, அண்ணாமலை, வேத பிரகாஷ், எஸ். அமுதா, உதவி திட்ட அலுவலர் ரா.பிரபாகரன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குணசுந்தரி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சேது ராஜன், நகராட்சி ஆணையாளர் பழனி உள்ளிட்ட துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் தி.மு.க. நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்