ஒன்றியக்குழு கூட்டத்தில் இருந்து உறுப்பினர்கள் வெளிநடப்பு
திருமருகலில் நடந்த ஒன்றியக்குழு கூட்டத்தில் இருந்து உறுப்பினர்கள் வெளிநடப்பு;
திட்டச்சேரி:
திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலக அவை கூடத்தில் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் காலை 11 மணிக்கு நடைபெறும் என அனைத்து ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கூட்டத்திற்கு உறுப்பினர்கள் வந்தனர். ஆனால் மதியம் 1.30 மணி ஆகியும் கூட்டம் தொடங்கப்படாததால் அதிருப்தி அடைந்த தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த ஒன்றியக்குழு உறுப்பினர்கள் திடீரென கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். மேலும் கூட்டத்தை உரிய நேரத்தில் நடத்த தவறிய ஊராட்சி ஒன்றிய ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட கலெக்டருக்கு தபால் கொடுப்பதாக கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தை விட்டு வெளியேறி சென்றனர். இதனால் ஒன்றியக்குழு கூட்டம் நடத்தப்படாமல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.