'செந்தில் பாலாஜியை கைது செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை'; அமைச்சர் இ.பெரியசாமி பேட்டி

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அமைச்சர் இ.பெரியசாமி கூறினார்.

Update: 2023-06-17 21:00 GMT

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அமைச்சர் இ.பெரியசாமி கூறினார்.

பரிசளிப்பு விழா

தேனி மாவட்ட அளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. அப்போது தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களை பிடித்த 1,442 பேருக்கு பரிசளிப்பு விழா, தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.

இந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கினார். ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் இ.பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார். விழாவில் எம்.எல்.ஏ.க்கள் மகாராஜன், சரவணகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன், தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன், தி.மு.க. மாவட்ட விளையாட்டு அமைப்பாளர் ராஜசேகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

பழிவாங்கும் நடவடிக்கை

விழாவை தொடர்ந்து அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. மக்கள் இதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தக்கப் பாடம் புகட்டுவார்கள். முதல்-அமைச்சர் கடிதத்தை கவர்னர் ஏற்க மறுத்திருக்கிறார். அமைச்சர்களை நியமனம் செய்யும் அதிகாரம் முதல்-அமைச்சருக்கு தான் இருக்கிறது. தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்க முடியாமல் போனதற்கு தகவல் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருந்திருக்கிறது. இனிமேல் இதுபோன்று எப்போதும் ஏற்படாது. விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்