மகாத்மா காந்தி மீண்டும் கொல்லப்பட்டுள்ளார்: ப.சிதம்பரம்

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோத செயலில் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது என்று ப.சிதம்பரம் கூறினார்.;

Update:2025-12-21 12:21 IST

ப.சிதம்பரம்

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோத செயலில் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கு ஜோடிக்கப்பட்டது; இவ்வழக்கில் நீதிபதி சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளார். வழக்கின் விசாரணையில் அமலாக்கத்துறை பெரும் பிழை செய்துள்ளது.

பணப் பரிமாற்றம் என்பது குற்றமல்ல. நாள்தோறும் பணப் பரிமாற்றம் சாமானிய மக்களிடையே நடந்து வருகிறது. ஆனால் சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்வதே குற்றம். சட்டத்தை மீறிய பணப் பரிமாற்றமே குற்றம். அப்படி நடந்தால், காவல்துறை, புலனாய்வுத்துறை உள்ளிட்டோர் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

பணப் பரிமாற்றமே நடக்கவில்லை; அது எப்படி சட்டவிரோதமாகும்?. பழிவாங்கும் நடவடிக்கையை மத்திய அரசு இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். முதல் தகவல் அறிக்கையே பதிவு செய்யவில்லை, ஆனால் அமலாக்கத் துறை வழக்கை கையில் எடுத்தது. மேல்முறையீடு வேண்டுமென்றால் செய்யட்டும், அப்படியென்றால் அவர்களுக்கு புத்தி தெளியவில்லை என அர்த்தம். இத்துடன் பழிவாங்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும்.

100 நாள் வேலை திட்டத்துக்கு தற்போது வைத்துள்ள பெயர் காந்தியை விட பொருத்தமான பெயரா?. பெயரை நீக்கியதன் மூலம் 77 ஆண்டுகளுக்குப் பின் மகாத்மா காந்தி மீண்டும் கொல்லப்பட்டுள்ளார். இந்த திட்டத்திற்கு வைத்துள்ள வாயில் நுழையாத பெயர் இந்தியா? ஆங்கிலமா?. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்