தமிழ்நாடு அரசின் பணிகள் குறித்து விழுப்புரத்தில் புகைப்பட கண்காட்சி அமைச்சர்கள் தொடங்கி வைக்கிறார்கள்

தமிழ்நாடு அரசின் பணிகள் குறித்து விழுப்புரத்தில் நடைபெற உள்ள புகைப்பட கண்காட்சியை அமைச்சர்கள் தொடங்கி வைக்கிறார்கள்.

Update: 2023-02-02 18:45 GMT

விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக மைதானத்தில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல் 14-ந் தேதி வரை தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித்திட்டங்கள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கம் ஏற்படுத்தும் வகையிலும், திட்ட செயல்பாடுகள் குறித்த புகைப்பட கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதையொட்டி ஊரக வளர்ச்சித்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், உணவு பாதுகாப்புத்துறை மற்றும் உள்ளூர் தயாரிப்பு நிறுவனம் மூலம் பாரம்பரிய உணவு மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவு வகைகள் கொண்ட உணவுத்திருவிழா மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. மேலும் புத்தக நிலையமும், மகளிர் சுய உதவிக்குழுவினர், உள்ளூர் கைவினைஞர்கள் தயாரித்த கைவினைப்பொருட்கள் அடங்கிய அரங்கமும் அமைக்கப்பட உள்ளது.

இந்த புகைப்பட கண்காட்சியை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் திறந்து வைத்து பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்குகின்றனர். எனவே பொதுமக்கள் திரளான அளவில் பங்கேற்று அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டு பயனடையலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்