அரசியல் லாபம் பெறவே உத்தரபிரதேசத்தில் எம்.பி. தொகுதிகளை இருமடங்கு அதிகரிக்க முயற்சி -கே.எஸ்.அழகிரி

அரசியல் லாபம் பெறவே உத்தரபிரதேசத்தில் நாடாளுமன்ற தொகுதிகளை இருமடங்கு அதிகரிக்க முயல்கின்றனர் என்று கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-12 23:07 GMT

சென்னை,

சுயநலத்துக்காக நாடாளுமன்ற தொகுதிகளை அதிகரிக்க மத்திய பா.ஜ.க. அரசு உத்தேசித்துள்ளது. மக்கள் தொகை அதிகரிப்பை கருத்தில் கொண்டு நாடாளுமன்ற தொகுதிகளையும், மாநிலங்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கையையும் அதிகரிப்பது சரியானதாக இருக்காது.

23 கோடியே 32 லட்சம் மக்கள் தொகை கொண்ட உத்தரபிரதேசத்தில் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இனி அதனை 132 தொகுதிகளாக அதிகரிக்கவும், 53 மாநிலங்களவை பதவிகளை அதிகரிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் குறைவாகவும், மக்கள் தொகை அதிகம் உள்ள வளர்ச்சியடையாத உத்தரபிரதேச மாநிலத்துக்கு இரு மடங்கு அதிகமாக நாடாளுமன்ற தொகுதியை அதிகரிப்பதும் எந்த வகையில் நியாயம்?.

கண்டனம்

மக்கள் தொகையை மட்டுமே அடிப்படையாக வைத்து எம்.பி. தொகுதிகளை உயர்த்துவது பாரபட்ச நடவடிக்கையாகும். அரசியல் லாபம் பெறவே உத்தரபிரதேசத்தில் எம்.பி. தொகுதிகளை இருமடங்கு அதிகரிக்க முயல்கின்றனர். இத்தகைய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகை வளர்ச்சி சதவீத அடிப்படையில் எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அதே சதவீத அடிப்படையில் ஒவ்வொரு மாநில நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டுமே தவிர, ஒவ்வொரு மாநில மக்கள் தொகை உயர்வின் அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மத்திய அரசின் கொள்கையின்படி குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை ஏற்றுக்கொண்டு சிறப்பாக செயல்படுத்தி, மக்கள் தொகையை குறைத்ததற்காக தண்டிக்கிற வகையில் மத்திய அரசின் அணுகுமுறை இருக்கக்கூடாது.

எனவே, அனைத்து மாநிலங்களுக்கும் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியது மற்றும் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு நாடாளுமன்ற தொகுதிகளையும், மாநிலங்களவை எம்.பி. பதவிகளையும் அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்