"ஹிட்லரே இது ஜெர்மனி அல்ல" - பேச்சுரிமைக்கு எதிரான நடவடிக்கைக்கு கமல்ஹாசன் கண்டனம்

பிரதமர், அமைச்சருக்கு எதிராக யாரும் பேச கூடாது என்று கருதுவது ஆபத்தானது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-14 15:16 GMT

Image Courtesy : PTI 

சென்னை,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18ந்தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பயன்படுத்த கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகம் ஒன்று மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது என்ற தகவல் வெளியானது.

அந்த புத்தகத்தில் இடம்பெற்ற வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி உட்பட பல வார்த்தைகள் நாடாளுமன்றத்தில் இனிமேல் தடை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் எம்.பி.க்களின் பேச்சுரிமையை மறுக்கும் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பதாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மக்கள் நீதி மையம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "மிஸ்டர் ஹிட்லர், இது ஜெர்மனி அல்ல மன்னராட்சி முறையை கொண்டுவரத் துடிக்கிறீர்களோ?. எம்.பி.க்களின் பேச்சுரிமையை மறுக்கும் நடவடிக்கைக்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அத்துடன் அந்த கட்சியின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், " பிரதமர் அமைச்சருக்கு எதிராக யாரும் பேச கூடாது என்று கருதுவது ஆபத்தானது.பாராட்டுகளை மட்டுமே கேட்டு கொண்டு இருக்க மன்னராட்சி முறை நடக்கிறதா ?. ஹிட்லராக மாற இது ஜெர்மனி அல்லவே " எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயன்படுத்த கூடாத வார்த்தைகள் என வெளியான தகவல் குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறும்போது, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எந்த வார்த்தையும் தடை செய்யப்படவில்லை. இந்த பட்டியலானது, கடந்த காலங்களில் அவைகளில் இருந்து நீக்கப்பட்ட வார்த்தை பதிவுகளின் தொகுப்புகள் ஆகும் என விளக்கம் அளித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்