திருச்செந்தூர் அருகே வழிப்பறி கொள்ளையர் 3 பேர் சிக்கினர்

திருச்செந்தூர் அருகே வழிப்பறி கொள்ளையர் 3 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், பணம் மீட்கப்பட்டது.

Update: 2022-12-13 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே வழிப்பறி கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம், மோட்டார் சைக்கிளை போலீசார் மீட்டனர்.

நகை, பணம் வழிப்பறி

திருச்செந்தூர் குமாரபுரத்தை சேர்ந்தவர் சந்தனகுமார் (வயது 29). இவர் கடந்த மாதம் 11-ந் தேதி குமாரபுரத்தில் இருந்து சங்கிவிளை செல்லும் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 3 பேர் வழிமறித்து மிரட்டி பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து சென்றனர். மேலும் அவர்கள், வந்த மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு சென்று விட்டனர். இதுகுறித்து சந்தனகுமார் கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் அடைக்கலாபுரம் மெயின் ரோட்டில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து அவர்களை, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

கொள்ளையர்கள் கைது

இதில் அவர்கள், மணப்பாட்டை சேர்ந்த மரியயோஷின் (22), காயல்பட்டினம் அருணாசலபுரம் திருமூர்த்தி (25), கூடங்குளம் ராயர் (42) என்பதும், சந்தனகுமாரை மிரட்டி பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து சென்றதும் தெரிய வந்தது. மேலும், அவர்கள் 7 ஆடுகள் மற்றும் பன்றிகளையும் திருடியிருப்பதும் தெரிந்தது. அந்த கொள்ளையர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து பணம், மோட்டார் சைக்கிள் மற்றும் ஆடு, பன்றிகளை மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்