கன்னியாகுமரி-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் வடமாநிலத்தவர்கள் அட்டகாசம் - பயணிகள் கடும் அவதி...!
கன்னியாகுமரி -ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டிகளில் வடமாநிலத்தவர்கள் அமர்ந்து கொண்டு அட்டகாசம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
செங்கல்பட்டு:
ஹவுராவில் இருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் செங்கல்பட்டு மார்க்கமாக இயக்கப்படுகிறது. நேற்று அதிக அளவிலான வடமாநிலத்தவர்கள் இதில் பயணம் செய்துள்ளனர். சென்னை எழும்பூர் ரெயில்நிலையத்தில் முன்பதிவு செய்த பயணிகள் இருக்கைகளில் அதிக அளவிலான சுமார் 200-க்கும் மேலான வடமாநிலத்தவர்கள் பயணம் செய்துள்ளனர்.
முன்பதிவு செய்தவர்கள் இருக்கைகளில் அமர்ந்து கொண்ட வடமாநிலத்தவர்கள், முன்பதிவு செய்த பயணிகளுக்கு இடமளிக்காமல் உட்கார்ந்துள்ளனர். இதனால் எழும்பூரிலிருந்து செங்கல்பட்டு வரை அவர்களோடு வாக்குவாதம் செய்தவாறு நின்றபடியே பயணித்து வந்துள்ளனர்.
இதனால் செங்கல்பட்டு ரெயில்நிலையத்தில் இறங்கிய முன்பதிவு செய்த பயணிகள் ரெயில்வே போலீஸ்நிலையத்தில் தகவல் அளித்து நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு வடமாநிலத்தவர்களை கீழே இறக்கி மாற்று ரெயிலில் அனுப்பி வைத்தனர். இதனால் 1 மணிநேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டது.
மேலும் அதிகமாக பெண்கள் பயணித்த பெட்டிகளில் அரைகுறை ஆடைகளுடன் வடமாநிலத்தவர்கள் பயணித்ததாகவும், பெண்கள் இரண்டு மூன்று முறை ரெயிலை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.