கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையங்களில் அதிகாரி ஆய்வு
வருகிற 1-ந் தேதி முதல் கொள்முதல் தொடங்க உள்ளதால், கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையங்களில் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.;
பொள்ளாச்சி,
வருகிற 1-ந் தேதி முதல் கொள்முதல் தொடங்க உள்ளதால், கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையங்களில் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.
கொப்பரை தேங்காய்
தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் விலை ஆதார திட்டத்தின் கீழ் கோவை வேளாண் விற்பனை குழு பொள்ளாச்சி, நெகமம், செஞ்சேரிமலை, அன்னூர், ஆனைமலை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் கிலோ ரூ.105.90-க்கு கொள்முதல் செய்யப்பட்டது.
அதன்படி கோவை மாவட்டத்தில் சுமார் 18 ஆயிரம் விவசாயிகளிடம் இருந்து கிட்டதட்ட 18 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய், ரூ.185 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு வருகிற 2023-ம் ஆண்டு சீசனுக்கான கொப்பரை தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் அளித்து உள்ளது. அதன்படி அரவை கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.108.70-க்கும், பந்து கொப்பரை தேங்காய் ரூ.117.50-க்கும் கொள்முதல் செய்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதிகாரி ஆய்வு
இந்த நிலையில் வருகிற 1-ந்தேதி முதல் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்கிடையில் கொப்பரை கொள்முதல் நிலையங்களில் செய்யப்பட்டு உள்ள வசதிகள் குறித்து பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் வேளாண் விற்பனை மற்றும் விற்பனை குழு இணை இயக்குனர் உமாதேவி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கொள்முதல் செய்வதற்கு போதிய இடவசதி உள்ளதா என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது விவசாயிகள் கொப்பரை தேங்காய் கொள்முதலுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். மேலும் தேங்காயை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்கு இணை இயக்குனர் விவசாயிகளின் கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.