மின்தடையின்போது ஜெனரேட்டர் இயங்காததால் மூதாட்டி சாவு?
ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் மின்தடை ஏற்பட்டபோது உடனடியாக ஜெனரேட்டர் இயங்காததால் மூதாட்டி மூச்சுத்திணறி இறந்ததாக பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.;
ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் மின்தடை ஏற்பட்டபோது உடனடியாக ஜெனரேட்டர் இயங்காததால் மூதாட்டி மூச்சுத்திணறி இறந்ததாக பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
மூதாட்டிக்கு சிகிச்சை
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள தாதனேந்தல் கிராமத்தை சேர்ந்த கருப்பையா என்பவருடைய மனைவி காளிமுத்தம்மாள் (வயது 62). இவர் இதய நோய், சர்க்கரை நோய் பாதிப்பு காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் நேற்று காலை தனது மகனிடம் இட்லி வாங்கி வரும்படி கூறியுள்ளார். எனவே இட்லி வாங்க மகன் வெளியே சென்றுள்ளார்.
திடீர் மின்தடை
அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஜெனரேட்டர் இயங்காததால் சில மருத்துவ கருவிகள் இயங்காமல் நின்றதாகவும், இதன் காரணமாக காளிமுத்தம்மாளுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து காளிமுத்தம்மாளின் மருமகன் நித்தியானந்தம் உள்ளிட்ட உறவினர்கள் கூறும்போது, "ஆஸ்பத்திரியில் அளித்த சிகிச்சையால் காளிமுத்தம்மாளுக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, நன்றாக பேசினார். ஆனால், மின்சாரம் தடைபட்டதும் உடனடியாக ஜெனரேட்டர் இயங்காததால், உயிர்காக்கும் கருவிகள் சரிவர செயல்படாததால்தான் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டார். இதுபற்றி கேட்டால், தவறு நடந்துவிட்டது என்று அந்த வார்டில் இருந்த மருத்துவ பணியாளர்கள் முதலில் கூறினர். அதன்பின்னர், உடல் நிலையில் திடீரென்று பின்னடைவு ஏற்பட்டு இறந்துவிட்டதாக கூறுகின்றனர். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை என்பதால் எல்லா வசதிகளும் இருக்கும் என்று மக்கள் நம்பி இங்கு வரும் நிலையில், முறையாக ஜெனரேட்டர் இயங்காததால் ஒரு உயிர் பலியாகிவிட்டது. இதுசம்பந்தமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
ஆஸ்பத்திரி நிர்வாகம் விளக்கம்
இதுகுறித்து ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்ததாவது:-
உயிரிழந்த மூதாட்டிக்கு, இதய நோய், சிறுநீரக பாதிப்பு இருந்தது. மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு கொண்டு வந்தனர். ஆக்சிஜன் உதவியுடன் சுவாசித்து வந்தார். மின் தடைக்கும், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் ஆக்சிஜன் வினியோகத்திற்கும் தொடர்பு இல்லை. மின்சாரம் தடைபட்டாலும் நோயாளிக்கு எந்த தடையுமின்றி ஆக்சிஜன் கிடைத்துக்கொண்டே இருக்கும். மின்சாரம் தடைபட்டால் சில நிமிடங்களில் ஜெனரேட்டர் இயக்கப்படும். இதற்காக 24 நேரமும் பணியாளர்கள் உள்ளனர். உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் மின்சாரம் தடைபட்டாலும் குறிப்பிட்ட நேரம் வரை இயங்கும் வகையில் பேட்டரி பேக்-அப் வசதியுடன் கூடியவை. எனவே மின்தடையாலோ, ஜெனரேட்டர் உடனே இயக்கப்படாததாலோ காளிமுத்தம்மாள் உயிரிழக்கவில்லை.
இவ்வாறு விளக்கம் அளித்தனர்.