ரூ.80 லட்சம் மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது
ரூ.80 லட்சம் மோசடி வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்;
கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் டேவிட் சாமுவேல். இவர் தனது மகன் ரொனால்டு ரீகன் (வயது 40) மற்றும் ராஜேந்திரன் ஆகியோருடன் சேர்ந்து குறிச்சி ஹவுசிங்யூனிட் பகுதியில் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி வந்தார். அவரிடம் ஏராளமானோர் ஏலச்சீட்டுக்கு பணம் செலுத்தி வந்தனர்.
ஆனால் பணம் செலுத்தியவர்களுக்கு முதிர்வு காலம் முடிந்தும் பணத்தை திரும்ப கொடுக்காமல் 3 பேரும் ஏமாற்றியதாக தெரிகிறது. இது குறித்து கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் அவர்கள், 40 பேரிடம் ரூ.80 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்தது தெரியவந்தது.
இது தொடர்பாக டேவிட் சாமுவேலை கடந்த 2021-ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் கவுண்டம்பாளையம் அருகே வீட்டில் பதுங்கி இருந்த ரொனால்டு ரீகனை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ராஜேந்திரனை போலீசார் தேடி வருகிறார்கள்.