கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்.. 5 கி.மீ.க்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

ஊட்டி, கொடைக்கானலில் தற்போது உறைபனி சீசன் நிலவி வருகிறது.;

Update:2025-12-26 13:13 IST

திண்டுக்கல்,

தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளங்களான ஊட்டி, கொடைக்கானலில் தற்போது உறைபனி சீசன் நிலவி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கீழ் பூமி, ஜிம்கானா பகுதிகளில் புல்வெளியில் உறைபனியும், அதற்கு மேல் பனிமூட்டமும், அதே சமயம் எதிர்மலையில் தென்படும் லேசான வெயிலும் சுற்றுலா பயணிகளுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது. குறிப்பாக புல்வெளிகளில் இருக்கும் புற்கள் மீது உறைபனியானது அதிகாலை நேரங்களில் முத்து மணிகளைப் போல் ஒட்டிக்கொண்டு அழகாக காட்சியளிக்கிறது. இந்த காட்சிகளை பார்வையிட சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், அரையாண்டு விடுமுறை காரணமாக, கொடைக்கானலுக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிகாலை முதலே கார், வேன், பஸ் என ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்தனர். இதனால் ‘மலைகளின் இளவரசி’ திக்குமுக்காடியது. எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே இருந்தது.

இதனிடையே, அதிகரிக்கும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காரணமாக கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. போக்குவரத்து நெரிசலால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர். போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்