ஊட்டி ரோஜா கண்காட்சி மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு

ஊட்டி ரோஜா கண்காட்சியை மேலும் 3 நாட்கள் நீட்டிப்பதாக தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.

Update: 2024-05-19 13:08 GMT

நீலகிரி,

கோடை வாசஸ்தலமான நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது. கோடை சீசனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக ஊட்டியில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி கடந்த 10-ந்தேதி தொடங்கியது.

ஊட்டி ரோஜா பூங்காவில் தோட்டக்கலைத்துறை சார்பில் நடைபெற்ற இந்த மலர் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ரோஜா மலர்களைக் கொண்டு யானை, புறா, புலி உள்ளிட்ட விலங்குகளின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. இதனை சுற்றுலா பயணிகள் மிகவும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

கடந்த 10 நாட்களில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ரோஜா கண்காட்சியை கண்டு ரசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றோடு மலர் கண்காட்சி நிறைவு பெற இருந்தது.

இந்த நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டு, ஊட்டி ரோஜா கண்காட்சியை மேலும் 3 நாட்கள் நீட்டிப்பதாக தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, 22-ந்தேதி வரை ஊட்டி ரோஜா கண்காட்சி நடைபெறும் என்றும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தோட்டக்கலைத்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்