திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

திருவையாறு சேர்ந்த சாமிநாதன் செண்பகவல்லி மகள் பவானி திருமணமான ஆறு மாதத்தில் விவாகரத்து ஆன பிறகு பெற்றோருடன் வாழ்ந்து வந்துள்ளார்.;

Update:2025-12-19 14:49 IST

திருச்சி,

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்குச் சொந்தமாக பஞ்சகரை பகுதியில் பக்தர்கள் தங்கும் விடுதி கடந்த 2021 ஆம் ஆண்டு 47 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு செயல்படுகிறது.வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஸ்ரீரங்கம் உள்ளிட்ட திருச்சியில் உள்ள கோவிலுக்கு தரிசனம் செய்ய வருபவர்கள் தங்கி செல்ல வசதியாக இது செயல்படுகிறது.

இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சேர்ந்த சாமிநாதன்(67), அவரது மனைவி செண்பகவல்லி(65) மற்றும் மகள்கள் பவானி(47), ஜீவா (32) ஆகியோர் கடந்த 10 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை இந்த விடுதியில் தங்க முன்பதிவு செய்திருந்தனர்.14-ஆம் தேதி அன்று மேலும் இரண்டு நாட்கள் தங்க அனுமதி கேட்டு தங்கி உள்ளனர். இந்த நிலையில் 19 -ம் தேதியான நிலையில் அவர்கள் அறையை காலி செய்யாததால் இது குறித்து கேட்க இன்று விடுதி பராமரிப்பாளர்கள் அந்த அறையின் அருகே சென்றபோது துர்நாற்றம் வீசி உள்ளது. உடனே அருகில் இருப்பவர்களை அழைத்து கதவை உடைத்துப் பார்த்தபோது சுவாமிநாதன் உள்ளிட்ட நான்கு பேரும் இறந்த நிலையில் இருந்துள்ளனர்.

இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.ஸ்ரீரங்கம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தியதில் பவானி (42), ஜீவா(37) இருவரும் மன வளர்ச்சி குன்றியவர்கள் என்பதும் மூத்த மகள் பவானி திருமணமாகி சில மாதங்களிலேயே விவாகரத்து ஆகி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தங்களுக்கு வயது மூப்பு ஆகிய நிலையில் தங்களுக்கு பின்னால் தங்கள் குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வார்கள் என்கிற விரக்தியில் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷமருந்தி 4 பேரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. நான்கு பேரின் உடல்களை மீட்ட காவல்துறையினர், உடல் கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்