பல்லடம் படுகொலை சம்பவம்: முக்கிய குற்றவாளி உட்பட 2 பேர் காவல் நிலையத்தில் சரண்

பல்லடம் படுகொலை சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளி உட்பட 2 பேர் காவல் நிலையத்தில் சரண் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2023-09-06 05:16 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள கள்ளக்கிணறு கிராமத்தைச் சேர்ந்த தவிடு புண்ணாக்கு வியாபாரம் செய்து வந்த 47 வயதான செந்தில் குமாரின் வீட்டின் முன்பு நேற்று முன் தினம் இரவு 3 பேர் கொண்ட கும்பல் மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதனை செந்தில் குமார் தட்டிக் கேட்ட நிலையில், அதன் காரணமாக ஆத்திரமடைந்த அக்கும்பல் செந்தில் குமாரை முதலில் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளது. இந்த கொடூர சம்பவத்தின் போது, தடுக்க சென்ற செந்தில் குமாரின் தம்பி மோகன்ராஜா, அவருடைய தாய் புஷ்பவதி, சித்தி ரத்தினாம்பாள் ஆகியோரையும் அந்த கும்பல் சரமாரியாக வெட்டியுள்ளது.

இந்த சம்பவத்தின் விசாரணையில் ஆறு மாதத்திற்கு முன்பு பணம் பிரச்சினை தொடர்பாக செந்தில்குமாருக்கும், 34 வயதான வெங்கடேஷ் என்பவருக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய செல்லமுத்து என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்ற போது அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது.

இந்நிலையில் இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளி உட்பட் 2 பேர் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முக்கிய குற்றவாளியான வெங்கடேஷ் மற்றும் சோனை முத்தையா ஆகியோர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் சரண் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர்கள் இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்