தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு

தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு செய்தனர்.

Update: 2022-08-05 16:39 GMT

தமிழக சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தலைமையில் உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் சிந்தனைசெல்வன், ஜவாஹிருல்லா, வேல்முருகன், செயலாளர் சீனிவாசன், சிறப்பு பணி அதிகாரி ராஜா, இணை செயலாளர் தேன்மொழி, துணைச்செயலாளர் ரேவதி, சார்பு செயலாளர் பால சீனிவாசன் ஆகியோர் நேற்று தென்காசிக்கு வந்தனர். அவர்கள் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி அருகில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, மேக்கரை, மேலகரம் குப்பை கிடங்கு, தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை ஆகிய இடங்களை குழுவினர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உடனிருந்தார்.

பின்னர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. கூறுகையில், குற்றாலத்தில் அருவியில் பெண்கள் குளிக்கும்போது நீரில் அடித்து செல்லப்பட்ட இடத்தை ஆய்வு செய்தோம். தென்காசி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தோம். இந்த மருத்துவமனை சிறப்பாக இயங்கி வருகிறது. அதே நேரத்தில் இங்கு பணியாற்றும் செவிலியர்களுக்கு 5 மாத சம்பளம் வழங்கவில்லை என்று கூறினார்கள். அதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்கிறோம். கடந்த மார்ச் மாதம் கொரோனா காலத்தில் இந்த மருத்துவமனையில் ரெமி டிசீவர் மருந்து உபயோகப்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது தெரியவந்தது. இதுபோன்று நஷ்டப்படும் செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. மருத்துவ உபகரணங்கள் சரிவர பயன்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து நாளை மருத்துவமனையில் இருந்து அறிக்கை அளிக்கிறோம் என்று கூறியுள்ளார்கள். நாளை இறுதி அறிக்கையினை அரசுக்கு அளிக்க உள்ளோம்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்