பிளைவுட் குடோன்களில் பெட்ரோல் குண்டு வீச்சு

மேட்டுப்பாளையத்தில் 2 பிளைவுட் குடோன்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-09-23 18:45 GMT

மேட்டுப்பாளையம், 

மேட்டுப்பாளையத்தில் 2 பிளைவுட் குடோன்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிளைவுட் குடோன்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் செந்தில் தியேட்டர் ரோடு பகுதியை சேர்ந்தவர் சஜ்ஜின் (வயது 45). இவர் மேட்டுப்பாளையம்-காரமடை சாலையில் பிளைவுட் கடை வைத்து நடத்தி வருகிறார். அவரது கடை அருகே குடோனும் உள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத சில மர்ம ஆசாமிகள், சஜ்ஜினின் பிளைவுட் குடோனின் பின்பக்க ஜன்னல் கம்பி வலைகளை அறுத்து குடோனுக்குள் பெட்ரோல் குண்டு மற்றும் பெட்ரோல் நிரப்பிய பிளாஸ்டிக் பைகளை வீசி உள்ளனர். இதில் சில பிளைவுட்டுகள் எரிந்து நாசம் அடைந்தன. வீசிய வேகத்தில் பாட்டில் கீழே விழுந்து உடைந்தது.

பெட்ரோல் குண்டு வீச்சு

இதனால் பிளைவுட்டில் பற்றிய நெருப்பு வேறு எங்கும் பரவாமல் சிறிது நேரத்தில் அணைந்து விட்டது.

இதேபோல் மேட்டுப்பாளையம்- காரமடை ரோடு பாரதி நகருக்கு செல்லும் பிரிவு பகுதியில் மதன் குமார் (53) என்பவருக்கு சொந்தமான பிளைவுட் குடோனிலும், மர்ம ஆசாமிகள் பெட்ரோல் நிரப்பிய பிளாஸ்டிக் பைகளை வீசினர். இதில் சில பிளைவுட்டுகள் எரிந்தன. இனால் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் சிறிய அளவில் மட்டும் தீ பற்றி அணைந்துவிட்டது.

நேற்று காலை பிளைவுட் கடை உரிமையாளர்கள் கடைகளை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, உள்ளே புகை வந்து கொண்டிருந்தது. இதையடுத்து சம்பவம் குறித்து அவர்கள் மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதையடுத்து கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாலாஜி, வெற்றிசெல்வன், போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், முருகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பிளைவுட் குடோன்கள் மற்றும் மேட்டுப்பாளையம்-காரமடை ரோட்டில் வைத்திருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாகன சோதனை

மேட்டுப்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலாஜி தலைமையில் போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து ஊட்டி மெயின் ரோடு ஓடந்துறை, பஸ் நிலையம் உள்பட 9 இடங்களில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். கோவை சரக ஐ.ஜி. சுதாகர், டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோர் வாகன சோதனை நடைபெறும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஒரே நாளில் 2 குடோன்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்