சனாதனம் விவகாரத்தில் அரசியல் செய்கிறார்கள்- பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு
சனாதனம் விவகாரத்தில் அரசியல் செய்கிறார்கள் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.;
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு தே.மு.தி.க. சார்பில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது நல்லதுதான். இது பெரிய திட்டம். இதனை உடனடியாக குறை கூற விரும்பவில்லை. தேர்தல் வாக்குறுதியாக கொடுத்து விட்டு, 2½ ஆண்டுகள் கழித்து தற்போது உரிமைத் தொகை ஆயிரம் வழங்கியுள்ளது. இந்த பணம் மக்களின் வரிப்பணம். அரசு இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் அதிகமாக இருக்கிறது. லஞ்சம், ஊழலை ஒழித்து, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். தேர்தல் வருவதையொட்டி தற்போது அரசியல் கட்சிகள் சனாதன பிரசாரத்தில் இறங்கி இருக்கிறது. மக்களிடம் சனாதனம் குறித்து எந்த பாகுபாடும் இல்லை. மக்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள், அரசியல் கட்சிகள் தான் சனாதன பிரச்சினையை கையில் எடுக்கிறார்கள். விஜயகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் மீண்டும் ரீ ரிலீஸ் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன், மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் கணபதி, நீர்மட்ட குழு உறுப்பினர் பாலன், தேர்தல் பணிக்குழு செயலாளர் அழகர்சாமி, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.