என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்ல போலீசார் திட்டம்
என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்ல போலீசார் திட்டம் போடுவதாக கோவையில் வீடியோ வெளியிட்டு கதறும் ரவுடியால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.;
கோவை
என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்ல போலீசார் திட்டம் போடுவதாக கோவையில் வீடியோ வெளியிட்டு கதறும் ரவுடியால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
பரபரப்பு வீடியோ
கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரத்தை சேர்ந்தவர் கவுதம் (வயது28). பிரபல ரவுடி. இவர் மீது ரத்தினபுரியை சேர்ந்த குரங்கு ஸ்ரீராம் கொலை வழக்கு உள்பட பல்வேறு அடிதடி, மோதல், தகராறு போன்ற வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் கவுதமின் கூட்டாளியான கோகுல் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை கோர்ட்டு முன்பு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கோவையில் உள்ள ரவுடிகளை போலீசார் தற்போது கைது செய்து வருகிறார்கள்.
இதில் கவுதம் மீதும் பல்வேறு வழக்குகள் இருப்பதால் அவரை யும் போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் கவுதம் செல்போ னில் பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர், " நான் கடந்த 8 ஆண்டுக்கு முன்பு வரை அடிதடி யில் ஈடுபட்டு வந்தேன். என் மேல் 10 முதல் 15 வழக்குகள் இருக்கு. எனக்கு அப்பா, அம்மா கிடையாது. கல்யாணத்துக்கு அப்புறம் 4 ஆண்டுகளாக எந்த விவகாரத்திலையும் ஈடுபடல.
திருந்தி வாழ்கிறேன்
எனக்கு மனைவி, 2 குழந்தைகள் இருக்கு. என் மனைவி கர்ப்பமாக இருக்கிறார். என் வீட்டில் பாதுகாப்பு இல்லாததால் மனைவியை அவருடைய பெற்றோர் வீட்டில் விட்டிருந்தேன். இந்த நிலைமையில மனைவி, மாமியார் அவரது சகோதரி மீது போலீசார் கஞ்சா வழக்கு போட்டு இருக்காங்க.
என்னை பிடிக்கணும் என்கவுண்ட்டர் பண்ணனும் என போலீஸ் டிபார்ட்மெண்ட்ல பேசிக்கிறாங்க. என் மேல 7 வழக்குல வாரண்ட் இருக்குது. இதுக்காக என்னை என்கவுண்ட் டரில் சுட்டுக் கொல்ல பாக்குறது நியாயம் இல்லைங்க. எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நான் இப்ப திருந்தி வாழ நினைக்கிறேன்.
நீதி வேண்டும்
ஆனா காமராஜபுரம் கவுதம் ஆளுங்க அப்படின்னு சொல்லி சொந்தக்காரர்கள் மேல கஞ்சா வழக்கு போட்டு இருக்காங்க. நான் கோர்ட்ல சரண்டர் ஆகி ஜெயிலுக்கு போனாலும் என்னை போலீஸ்காரங்க சுட்டுக் கொல்ல போறோம் அப்படின்னு திட்டம் போடுறதா பேசிக்கிறாங்க.
எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. என்னோட செல் போன்ல ரத்தினபுரி, சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர்கள் தொடர்பு கொண்டு பேசினாங்க. கோர்ட்ல போய் சரண்டர் ஆகி விடு, இல்லாவிட்டால் சுட்டு பிடிக்க வேண்டி இருக்கும்னு சொல்றாங்க... எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. எனக்கு நீதி வேண்டும் என அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.
வீடியோ வைரல்
இந்த வீடியோ சமூகவலைத்தளங்ளில் வைரலாகி வருகிறது.
கஞ்சா, கொலை மிரட்டல் வழக்கில் கவுதமை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் ரவுடி கவுதம் கதறும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் வீடியோ வெளியிட்ட ரவுடி கவுதமை போலீசார் தேடி வருகின்றனர்.