போக்குவரத்து நிறைந்த சாலையில் பள்ளங்கள்

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லும் போக்குவரத்து நிறைந்த சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பாதுகாப்பற்ற நிலையில் பயணம் மேற்கொள் கின்றனர்.;

Update:2022-09-22 00:15 IST

குண்டும், குழியுமாக மாறியது

பெரம்பலூர் நகர்ப்பகுதியில் முக்கியமான சாலையாக பாலக்கரை ரவுண்டானாவில் இருந்து கலெக்டர் அலுவலகத்துக்கு செல்லும் சாலை விளங்கி வருகிறது. கலெக்டர் அலுவலகம், அதன் பின்புறம் தான் மாவட்ட நீதிமன்றம், போலீஸ் அலுவலகம், விளையாடு அரங்கம் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சாலை வழியாக தான் நீதிபதிகள், மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், வக்கீல்கள், போலீசார், விளையாட்டு வீரர்கள் தினமும் சென்று வருகின்றனர்.

இதேபோல் கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம், போலீஸ் அலுவலகம், அரசு அலுவலகங்களுக்கும் பொதுமக்கள் இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர். மேலும் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து வரும் பஸ்கள் அனைத்தும் இந்த வழியாக தான் புதிய பஸ் நிலையத்துக்கு வந்து செல்கின்றன. இந்த சாலையில் ஷேர் ஆட்டோக்களும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த சாலை எந்நேரமும் போக்குவரத்து நிறைந்து பரபரப்பாக காணப்படும். ஆனால் இந்த தார் சாலை தற்போது பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாக மோசமாக காட்சியளிக்கிறது.

வாகன ஓட்டிகள் சிரமம்

இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். சேதமடைந்த சாலையால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இரு சக்கர வாகனங்களில் செல்வோர்களில் சிலர் கீழே விழுந்து காயங்களுடன் எழுந்து செல்கின்றனர். இரவு நேரத்தில் இந்த சாலையில் மின் விளக்குகளும் சரியாக எரிவதில்லை என்பதால் புதிதாக வரும் வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்வதற்கு படாத பாடு படுகின்றனர்.

இது தொடர்பாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரைக்கும் எந்தவொரு நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. இதனால் விபத்துகளும் நடந்து வருவதும் தொடர் கதையாகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான கலெக்டர் அலுவலக சாலையில் புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்