பசுமை சாம்பியன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பரிசுத்தொகை

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் 2022-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட 2 பேருக்கு பரிசுத்தொகையை குறைத்தீர்க்கும் கூட்டத்தில் வைத்து கலெக்டர் வழங்கினார்.

Update: 2023-06-05 18:45 GMT

சிவகங்கை,

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் 2022-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட 2 பேருக்கு பரிசுத்தொகையை குறைத்தீர்க்கும் கூட்டத்தில் வைத்து கலெக்டர் வழங்கினார்.

குறைத்தீா்க்கும் கூட்டம்

சிவகங்கை மாவட்ட அளவிலான மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில், தொழிலாளா் நலத்துறையின் சார்பில் சமூகப்பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 10 பயனாளிகளுக்கு ஓய்வூதிய தொகை மற்றும் இயற்கை மரண உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும் வழங்கினார்.

பசுமை சாம்பியன் விருது

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில், 2022-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட 2 பேருக்கு தலா ரூ.1 லட்சத்திற் கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரத்தினவேல், தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் கோட்டீஸ்வரி, மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவிப்பொறியாளர் சவுமியா, தாட்கோ மாவட்ட மேலாளா் முத்துலெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பரபரப்பு

மதுரை பி.பி.சாவடியை சேர்ந்த பாண்டிலெட்சுமியின் தாயார் அனுசியாதேவி பெயரில் அவரது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் நிலம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை தனக்கும், தனது தாயாருக்கும் தெரியாமல் உடன்பிறந்த அண்ணன் அழகேந்திரன் என்பவர் தனது பெயரில் பட்டா பெற்றதாக கூறப்படுகிறது. அந்த பட்டாவை ரத்து செய்து தரக்கோரி பாண்டி லெட்சுமி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தார். பின்னர் சிறிது நேரத்தில் திடீரென மயங்கி கீழே விழுந்தார்

இதனை கண்ட அங்கிருந்த அதிகாரிகள் முதலுதவி செய்து ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்