நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்பு: வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு

நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-02-03 20:58 GMT

சேலம் கொண்டலாம்பட்டி அருகே மேட்டுவெள்ளாளர் தெரு பகுதியில் மோகன் என்பவருக்கு சொந்தமாக 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அவர் தனது நிலத்தின் பேரில் தனியார் வங்கியில் கடன் வாங்கி உள்ளார். அந்த கடனுக்கான வட்டியை அவர் மாதந்தோறும் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே மோகனிடம் இருந்து அந்த நிலத்தை ஜெயராமன் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் அந்த விவசாய நிலத்தை வேறு நபருக்கு வங்கி மூலம் எழுதி கொடுத்து விட்டதாகவும், இதனால் நிலத்தை காலி செய்யுமாறு கடந்த 2 மாதங்களாக ஜெயராமனை சம்பந்தப்பட்ட தனியார் வங்கி நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார்.

இந்நிலையில், நேற்று காலை தனியார் வங்கி ஊழியர்கள் போலீசாருடன் வந்து ஜெயராமனிடம் நிலத்தை காலி செய்யுமாறு கூறினர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் வயலில் இறங்கி விவசாயம் செய்து கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்ட பெண்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்கள் விவசாய நிலத்தை காலி செய்ய மாட்டோம் என்று கூறி வங்கி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் நிலத்தை விட்டு தர மாட்டோம், அதையும் மீறி முயற்சி செய்தால் வயலில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினர். இதையடுத்து நிலத்தை கையகப்படுத்த வந்த வங்கி அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

மேலும் செய்திகள்