கலெக்டரிடம், பொதுமக்கள் கோரிக்கை

சீர்காழி அருகே கன்னியாகுடி ஊராட்சியில் பழுதடைந்த கட்டிடங்களை இடித்து விட்டு புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் லலிதாவிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.;

Update:2022-07-27 21:50 IST
சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கன்னியாகுடி ஊராட்சியில் அமைய உள்ள மாவட்ட மனநல காப்பகத்திற்கான இடத்தினை மாவட்ட கலெக்டர் லலிதா நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து காப்பகம் அமைய உள்ள இடத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

அப்போது அவர் கூறுகையில், கன்னியாகுடி ஊராட்சியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் மாவட்ட மனநல காப்பகம் அமைய உள்ளது. இதற்கான கட்டுமான பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதேபோல் காப்பகம் அருகில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் கால்நடைகளுக்கு தேவையான பசுமைப்புல் தீவனம் வளர்க்கப்படும் என்றார்.

பொதுமக்கள் கோரிக்கை

அப்போது அப்பகுதி பொதுமக்கள் கன்னியாகுடி ஊராட்சியில் ஏழை-எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். ஊராட்சியில் சேதமடைந்த நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டிடம், நியாய விலை கட்டிடம், கிராம நிர்வாக அலுவலர் கட்டிடம் உள்ளிட்ட கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சியில், மகளிர் வாழ்வாதாரம் உயரும் வகையில் சுயதொழில் தொடங்கும் வகையில் அரசு சார்பில் பயிற்சி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் இளங்கோவன், அருண்மொழி, தாசில்தார் செந்தில்குமார், ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர். முடிவில், மனநல காப்பக பாதுகாப்பு நிர்வாகி ஜெயந்தி உதயகுமார் நன்றி கூறினார்.







Tags:    

மேலும் செய்திகள்