கல்குவாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

வரகூரில் கல்குவாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-10 13:14 GMT

வாணாபுரம்

வரகூரில் கல்குவாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்குவாரி

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது வரகூர். இங்கு அண்ணா நகரில் அரசுக்கு சொந்தமான கல் குவாரி உள்ளது.

5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கல்குவாரியில் அரசு அனுமதியுடன் கற்களை வெட்டி வெளி மாநிலங்கள் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

மேலும் அரசு அனுமதித்த அளவீடுகளை தாண்டி அதிக அளவில் கற்களை வெட்டி அரசுக்கு வருவாய் இழப்பீடு ஏற்படுத்துவதாகவும் தொடர்ந்து கற்களை வெட்டி எடுக்கும் போது அதிகளவில் வெடிச்சத்தம் மூலம் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருவதாகவும் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பொதுமக்கள் முற்றுகை

இதன் காரணமாக இன்று காலை அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்குவாரியை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

கடந்த சில ஆண்டுகளாக கல்குவாரி அமைக்கப்பட்டு இப்பகுதிகளில் இருந்து கற்களை வெட்டி பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்கின்றனர். மேலும் கற்களை வெடி வைத்து வெட்டி எடுக்கின்றனர்.

இதன் காரணமாக அதிர்வுகள் அதிகளவில் ஏற்படுவதால் வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு, வீடுகள் விரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் நாங்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சந்தோஷ் ஆகியோர் வந்து பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினர். அவர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் லாரிகள் செல்லாதவாறு அந்த சாலையில் கற்களை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சமாதான பேச்சுவார்த்தைக்கு பொதுமக்கள் உடன்படாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்