கொங்குப்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியல்
காடையாம்பட்டி பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களிடம் போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
காடையாம்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட கொங்குப்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் பழுதடைந்த காரணத்தினால் புதிதாக கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள அலுவலகத்துக்கு அருகேயே கட்டுவதற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தோம். இதற்காக சிலர் தங்களது நிலத்தை கொடுக்க முன்வந்தனர்.
போக்குவரத்து வசதி இல்லை
ஆனால் குறிப்பிட்ட சிலருக்காக ஏற்கனவே இருந்த இடத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தை கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த இடத்துக்கு போக்குவரத்து வசதி இல்லை. எனவே பஞ்சாயத்து அலுவலகத்தை இடமாற்றம் செய்யாமல் அங்கேயே கட்ட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த சாலை மறியலினால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.