போடியில் காய்கறி வியாபாரிகள் சாலை மறியல்
போடியில் காய்கறி வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போடியில், சுந்தரபாண்டியன் தெருவில் தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. ஆனால் இங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. மேலும் போதிய இடவசதி இல்லாததால் நகராட்சி சார்பில் போடி புதிய நிலையம் அருகில் புதிய வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதையடுத்து வியாபாரிகள் அங்குள்ள கடைகளை வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்யும்படி நகராட்சி அறிவுறுத்தியது.
ஆனால் வியாபாரிகள் அங்கு செல்ல மறுத்ததுடன், தொடர்ந்து சுந்தரபாண்டியன் தெருவிலேயே வியாபாரம் செய்து வருகின்றனர். மேலும் புதிதாக கட்டப்பட்ட வணிக வளாகத்தில் மொத்தம் 40 கடைகளே உள்ளன. தற்போது இங்கு 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் உள்ளனர். இதனால் அங்கு இடவசதி போதாது. எனவே கூடுதல் கடைகள் கட்டும்படி கூறியதுடன், பழைய மார்க்கெட்டில் இருந்து செல்ல மறுத்துவிட்டனர்.
இந்தநிலையில் பழைய மார்க்கெட் பகுதியில் குப்பை, கழிவுகளை கொட்டுவதுடன், மார்க்கெட் பகுதியில் சாக்கடை கழிவுநீர் தேங்க செய்தும் வியாபாரத்திற்கு இடையூறு செய்வதாக வியாபாரிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு தினசரி மார்க்கெட் பாதையை மறித்து விளம்பர பேனர்கள் வைத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று போடி திருவள்ளுவர் சிலை அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்ைத நடத்தினர். அதைத்தொடர்ந்து வியாபாரிகள் மறியலை கைவிட்டனர். இந்த மறியலால் அங்கு அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.