போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகள்
போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.;
வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள சாலைகளில் சுற்றித்திரியும் ஆடு, மாடு, எருமை உள்ளிட்ட கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு மற்றும் அவ்வப்போது சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் சாலையோரம் நடந்து செல்லும் பொதுமக்களை கால்நடைகள் விரட்டி சென்று மோதி காயங்கள் ஏற்படுத்துதல் மற்றும் கால்நடைகள் விரட்டும்போது அவர்கள் தவறி கீழே விழுவது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.
மாநகராட்சி ஊழியர்கள் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து கோசாலையில் அடைக்கிறார்கள். மேலும் அவற்றின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனாலும் கால்நடைகள் போக்குவரத்துக்கு மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரிவது தொடர் கதையாக உள்ளது. வேலூர் டோல்கேட் பகுதியில் சாலையோரம், மாநகராட்சி அலுவலகம் அருகே, ஆற்காடு சாலை சைதாப்பேட்டை முருகன் கோவில் அருகே என்று பல்வேறு இடங்களில் நேற்று மாடுகள் சுற்றித்திரிந்தன. டோல்கேட் பகுதியில் சாலையில் நடந்து வந்த பெண்ணை திடீரென மாடு சிறிதுதூரம் விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. மாடுகள் கூட்டமாக நின்றதால் இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அந்த பகுதியை ஒருவித பயத்துடனே கடந்து சென்றனர். வேலூர் மாநகராட்சி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளருக்கு அபராதம் விதிப்பது மட்டுமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகனஒட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.