6 நாட்கள் காசி யாத்திரை - சென்னையில் இருந்து 1,300 பயணிகளுடன் புறப்பட்ட சிறப்பு ரெயில்
ரெயிலின் பயணத்தை பா.ஜ.க. மூத்த நிர்வாகிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.;
சென்னை,
காசி, அயோத்தி மற்றும் வட இந்தியாவில் உள்ள பிற புனித தலங்களுக்கு 6 நாள் ஆன்மீக யாத்திரை மேற்கொள்வதற்காக, ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் சங்கம் என்ற அமைப்பு மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு ரெயிலில், சுமார் 1,300 பக்தர்கள் இன்று சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த ரெயிலின் பயணத்தை பா.ஜ.க. மூத்த நிர்வாகிகள் எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
முழுவதும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளைக் கொண்ட இந்த ரெயிலானது, வட இந்தியாவில் உள்ள புனித தலங்களான பிரயாக்ராஜ், அயோத்தி, காசி மற்றும் கயா ஆகிய இடங்களுக்குப் பயணம் செய்து, யாத்திரையை முடித்த பிறகு சென்னைக்குத் திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து எச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், “500 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த ராமர் கோவில் பிரச்சினை பிரதமர் நரேந்திர மோடியால் தீர்க்கப்பட்டது. தற்போது காசிக்கு செல்பவர்கள், அந்த நகரம் முன்பு எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது என்ற வித்தியாசத்தை தெளிவாகக் காண முடியும்" என்று தெரிவித்தார்.