மும்பை டிராவல்ஸ் அதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி
மும்பை டிராவல்ஸ் அதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக கோவை பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.;
போத்தனூர்
மும்பை டிராவல்ஸ் அதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக கோவை பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
டிராவல்ஸ் நிறுவனம்
மராட்டிய மாநிலம் மும்பை செம்பூரை சேர்ந்த ராஜேஷ் (வயது 44) கோவை போத்தனூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நான் மும்பையில் சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறேன். நான் கடந்த 2020-ம் ஆண்டு கோவையில் வசிக்கும் எனது உறவினரை பார்க்க சென்றேன்.
அப்போது எனது உறவினர் மூலம் கோவை போத்தனூரை சேர்ந்த ேஹசல் ஜேம்ஸ் என்ற பெண் அறிமுகமானார்.
அதன்பிறகு நாங்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தோம்.
இந்த நிலையில் அந்த பெண் என்னிடம் தனது கணவர் இறந்து விட்டார் என்றும், 2 குழந்தைகளை வைத்து கஷ்டப்படுவதாகவும் கூறினார்.
மேலும் என்னிடம் உதவி கேட்டார். எனவே நான், அந்த பெண்ணுக்கு முதலில் ரூ.90 ஆயிரம் கொடுத்தேன்.
அதன் பிறகு துணிகள், விலை உயர்ந்த கார், செல்போன் போன்றவை வாங்கி கொடுத்தேன். அதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.
தற்கொலை மிரட்டல்
இந்த நிலையில் அந்த பெண்ணின் கணவர் இறக்க வில்லை என்பது எனக்கு தெரியவந்தது.
இது பற்றி அந்த பெண்ணிடம் கேட்ட போது எனது கணவர் இறக்கவில்லை என்றும், விவாக ரத்து தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடைபெறுவதாகவும் கூறினார்.
இதற்கிடையே அந்த பெண்ணிற்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டது. எனவே நான் அந்த பெண்ணை சந்தித்து இதுவரை உதவி செய்தவற்றை திரும்ப கொடு என்று கேட்டேன்.
ஆனால் அந்த பெண், பணம் கேட்டு தொல்லை செய்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுக்கிறார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
அதன் பேரில் போத்தனூர் போலீசார், ேஹசல்ஜேம்ஸ் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.