போக்குவரத்து விதி மீறியவர்களுக்கு ரூ.34 கோடி அபராதம்

போக்குவரத்து விதி மீறியவர்களுக்கு ரூ.34 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-10-16 20:46 GMT

திருச்சி மாநகர நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை மாநகர போலீஸ் கமிஷனர் காமினி ஆய்வு செய்தார். ஆய்வின்போது கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள், அவற்றின் செயல்படும் நிலை குறித்து பார்வையிட்டார். இதில் திருச்சி மாநகரில் குற்ற செயல்களை தடுக்கவும், குற்ற செயல்களில் ஈடுபடுவோரை விரைந்து கண்டுபிடிக்கவும் மாநகர பகுதி முழுவதும் மொத்தம் 1,129 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதில் 710 கேமராக்கள் தற்போது வரை நல்ல முறையில் இயங்கி வருகிறது. தனியார் பங்களிப்பு உதவியுடன் பொருத்தப்பட்டுள்ள 419 கேமராக்கள் மட்டுமே இயங்காமல் பழுதடைந்துள்ள நிலையில் உள்ளது. மேற்கண்ட பழுதை நிவர்த்தி செய்ய திருச்சி மாநகர போலீஸ் உத்தரவின்பேரில் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அபராதம் விதிக்கும் கருவிகள் சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையங்களுக்கு 30, போக்குவரத்து ஒழுங்கு பிரிவிற்கு 17 என மொத்தம் 47 அபராதம் விதிக்கும் கருவி பயன்பாடு குறித்து நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேற்கண்ட 47 அபராதம் விதிக்கும் கருவிகள் மூலம் நடப்பு ஆண்டில் (2023) மொத்தம் 3 லட்சத்து 76 ஆயிரத்து 560 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராத தொகையாக ரூ.34 கோடியே 51 லட்சத்து 97 ஆயிரத்து 705 விதிக்கப்பட்டுள்ளது. மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் மீது 1208 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வாகன சோதனையின்போது போலீசார் பொது மக்களிடம் பணிவுடனும், கனிவுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் மது அருந்தியும், ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், அதிவேகமாகவும், செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல் போன்றவை கடும் சாலை விதி மீறல்கள் ஆகும். இவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தி அதிகப்படியாக வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கமிஷனர் காமினி கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்