ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனையுடன் அனுமதி: போலீசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-09-22 21:43 GMT

சென்னை,

75-வது சுதந்திர தின விழா, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு விழா, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தில் 51 இடங்களில் அக்டோபர் 2-ந்தேதியன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி டி.ஜி.பி. உள்ளிட்டோரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சென்னை சுப்பிரமணியன், கடலூர் சண்முகசுந்தரம், ஈரோடு செந்தில்நாதன் உள்ளிட்ட 9 பேர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

அதில் அணிவகுப்பு ஊர்வலத்தை ஒழுங்குபடுத்த மட்டுமே போலீசாருக்கு அதிகாரம் உள்ளது. சட்ட ரீதியாக அனுமதி மறுக்க முடியாது. ஜம்மு காஷ்மீர் உள்பட அனைத்து மாநிலங்களிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சீருடையில் பேண்டு வாத்தியம் முழங்க அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் அனுமதி மறுப்பது சட்டவிரோதமானது என்று கூறப்பட்டு இருந்தது.

மத நல்லிணக்கம்

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, ''எந்த பாதையில் ஊர்வலம் செல்லப்போகிறது, எந்த இடத்தில் ஆரம்பித்து எந்த இடத்தில் முடிவடையப்போகிறது என்ற விவரங்களை மனுவில் தெரிவிக்கவில்லை. ஊர்வலத்தில் கோஷங்கள் எழுப்பக்கூடாது. காயம் ஏற்படுத்தும் எந்த பொருளுக்கும் அனுமதியில்லை. பதற்றம் மிகுந்த பகுதிகளில் செல்லக்கூடாது. குறிப்பாக சட்டம்-ஒழுங்கு மற்றும் மத நல்லிணக்கம் பாதிக்கும் வகையில் செயல்படமாட்டோம் என்ற உத்தரவாதத்தை மனுதாரர்கள் தரவில்லை. தந்தால் பரிசீலிப்போம்'' என்று வாதிட்டார்,

இடையூறு ஏற்படாது

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் ரபு மனோகர், ''பொதுக்கூட்டங்களை நடத்தவும், ஊர்வலம் செல்லவும் ஒவ்வொரு குடிமகனுக்கும் சட்ட ரீதியாக உரிமை உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த காலங்களிலும் ஆர்.எஸ்.எஸ். சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது. இதுவரையிலும் எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை. ஆனால் தமிழக போலீசார் தற்போது மட்டும் அனுமதி மறுக்கின்றனர்.

பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே அக்டோபர் 2-ந்தேதி ஊர்வலம் நடத்தப்படவுள்ளது. ஆர்.எஸ்.எஸ். ஒன்றும் தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல. நாங்கள் சட்டத்தை மதித்து நடப்பவர்கள் என்பதால் ஐகோர்ட்டு விதிக்கும் நிபந்தனைகளை ஏற்கத் தயார்" என்று வாதிட்டார்.

நிபந்தனையுடன் அனுமதி

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், வரும் அக்டோபர் 2-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி வருகிற 28-ந்தேதிக்குள் போலீசார் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கூறி இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்