ஆர்.டி.ஓ. தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை

சிவன் கோவிலில் பூஜை நடத்துவதில் ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காண ஆர்.டி.ஓ. தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

Update: 2023-02-10 18:45 GMT

கோத்தகிரி

சிவன் கோவிலில் பூஜை நடத்துவதில் ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காண ஆர்.டி.ஓ. தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

சிவன் கோவில்

கோத்தகிரி அருகே கல்லட்டி கிராமத்தில் உள்ள மலை மீது சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒருமுைற மட்டுமே கல்லட்டி கிராம மக்களால் பூஜை நடத்துவது வழக்கமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மட்டும் பெத்தளா கிராம மக்களும் பூஜை நடத்தி வந்ததாக தெரிகிறது.

இதற்கு, ஆகம விதிப்படி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூைஜ நடக்க வேண்டும், 2-வது முறை பூஜை நடத்தக்கூடாது என்று கல்லட்டி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் இரு தரப்பினரையும் அழைத்து கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. அதில், இரு தரப்பினரும் பூஜை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

பேச்சுவார்த்தை

இதையடுத்து கல்லட்டி கிராம மக்கள் சிவன் கோவிலில் இந்த ஆண்டுக்கான பூஜையை செய்தனர். தொடர்ந்து பெத்தளா கிராம மக்கள் பூஜை செய்வதில் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும் வகையில் குன்னூர் ஆர்.டி.ஓ. புஷ்ண குமார் தலைமையில் கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில், வழிபாட்டு உரிமை அனைவருக்கும் பொதுவானது. எனவே சிவன் கோவிலில் பெத்தளா கிராம மக்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும். இந்த ஆண்டு மட்டும் பூஜை நடத்தி கொள்ள பெத்தளா கிராம மக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. கல்லட்டி மக்களின் பட்டா நிலத்தில் கோவில் உள்ளதால் அதன் மீது பெத்தளா கிராம மக்கள் உரிமை கொண்டாட கூடாது.

உத்தரவு

எனவே இனிவரும் காலங்களில் பூஜை நடத்த அனுமதி இல்லை. வழிபாட்டுக்கு உரிமை உள்ளது. இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார். இதனால் சுமார் 3½ மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது. மேலும் உத்தரவுக்கு இரு தரப்பினரும் ஒத்துழைத்து படிவத்தில் கையெழுத்திட்டனர். அதன் நகல், இரு தரப்பினருக்கும் வழங்கப்பட்டது. பேச்சுவார்த்தையில் குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கோவிந்தசாமி, கோத்தகிரி தாசில்தார் காயத்ரி, துணை தாசில்தார் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சேகர், வருவாய் ஆய்வாளர் அருண், கிராம நிர்வாக அலுவலர் பழனிசாமி மற்றும் கல்லட்டி, பெத்தளாவை சேர்ந்த மொத்தம் 10 பேர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்