வதந்தி பரப்பியவர்களுக்கு அரசியல் கட்சியினருடன் தொடர்பு

தமிழகத்தில் உள்ள வடமாநில தொழிலாளர்களிடம் அமைதி திரும்பியது என்றும், வதந்தியை பரப்பியவர்களுக்கு அரசியல் கட்சியினருடன் தொடர்பு இருப்பதாகவும் கோவையில் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்;

Update:2023-03-10 00:15 IST

கோவை

தமிழகத்தில் உள்ள வடமாநில தொழிலாளர்களிடம் அமைதி திரும்பியது என்றும், வதந்தியை பரப்பியவர்களுக்கு அரசியல் கட்சியினருடன் தொடர்பு இருப்பதாகவும் கோவையில் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.

கலந்தாலோசனை கூட்டம்

கோவை சரகத்துக்கு உட்பட்ட கோவை. நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள தொழில் நிறுவனத்தினருடன் கலந்தாலோசனை கூட்டம் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.

இதில் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு தொழில் நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக கடந்த 1-ந் தேதி முதல் பரப்பப்பட்ட வதந்திகள், அதன் மூலம் ஏற்பட்ட குழப்பம் ஆகியவற்றை சரியான முறையில் கையாண்டு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினும் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதன் பிறகு தமிழகத்தில் இருந்த பதற்றம் தற்போது தணிந்து உள்ளது.

அமைதி திரும்பியது

தற்போது தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களிடம் அமைதி திரும்பி உள்ளது. இருந்தாலும் தொடர்ந்து பொய் வதந்திகள் பரப்பப்பட்டு தான் வருகிறது. இது தொடர்பாக தமிழகத்தில் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

3 பேர் கைது செய்யப் பட்டு உள்ளனர். இந்த வழக்குகளில் தலைமறைவாக உள்ள நபர்களை பிடிக்க டெல்லி, போபால், பெங்களூரு, பாட்னா ஆகிய பகுதிகளில் தனிப்படையினர் முகாமிட்டு உள்ளனர்.

வடமாநில தொழிலாளர்களிடம் தொடர்ந்து உரையாடல் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தொழில் அதிபர்களிடம் பேசி உள்ளோம்.

போலீசாரும் அவர்களுடன் பேசி ஒரு தொழிற்சாலைக்கு ஒரு வடமாநில ஊழியர் என்று வாட்ஸ்-அப் குழு ஏற்படுத்தி அவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அரசியல் கட்சியினருடன் தொடர்பு

மேலும் அவர்கள் குடியிருந்து வரும் பகுதியில் அடிக்கடி ரோந்து செல்ல வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இங்கு வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர் களின் பெற்றோர், உறவினர்கள் ஊரில் பயந்த நிலையில்தான் இருக்கிறார்கள்.

இங்கு நிலவுவதை அவர்களிடம் அவர்களது மொழியில் பேசி பயத்தை நீக்கி வருகிறோம்.

சமூக வலைத்தளத்தில் தமிழகத்துக்கு சம்பந்தம் இல்லாத வீடியோவை பதிவேற்றம் செய்து வதந்தியை பரப்பி வருகிறார்கள்.

வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதுபோன்று வீடியோவை தயாரித்து வெளியிட்டு வரும் குழுவை கண்டுபிடித்து அவர்கள் தயாரித்த வீடியோவை கைப்பற்றி உள்ளோம்.

இதில் தொடர்புடையவர் களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். அதில் சிலருக்கு அரசியல் கட்சியினருடன் தொடர்பும் உள்ளது. விசாரணையின் முடிவில்தான் முழு விவரமும் தெரியவரும்.

10 லட்சம் தொழிலாளர்கள்

தமிழகத்தில் 10 லட்சம் வடமாநில தொழிலாளர்கள் இருப்பதாக தெரியவந்து உள்ளது. அவர்கள் தொடர்பாக இருமாநில அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசுவதற்கு வசதியாக ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் இந்த குழுவை தொடர்பு கொண்டு தங்களுக்கு ஏற்படும் சந்தேகத்தை தீர்த்து வருகிறார்கள்.

சமூக வலைத்தளத்தை சிலர் தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். அதை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். இதுபோன்ற வதந்தியை பரப்பினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆன்லைன் மோசடி

ரவுடிகள் மீது நடத்தப்பட்டு வரும் துப்பாக்கிச்சூட்டை பொறுத்த வரை, போலீசாரின் உயிருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நிலை இருப்பதால் களநிலைமைக்கு ஏற்றவாறு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

தற்போது ஆன்லைன் மோசடி அதிகரித்து வருகிறது. செல்போன் மூலம் ஒரு லிங்க் அனுப்பி, வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஓ.டி.பி. எண் பெற்று பணத்தை மோசடி செய்து வருகிறார்கள்.

வங்கியில் இருந்து யாரும் ஓ.டி.பி. எண்ணை கேட்க மாட்டார்கள். எனவே யாரும் ஓ.டி.பி. எண்ணை கொடுத்துவிட்டு தங்களது பணத்தை இழக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், டி.ஐ.ஜி.க்கள் விஜயகுமார் (கோவை), ராஜலட்சுமி (சேலம்), கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், கோவை மாநகர துணை கமிஷனர் சந்தீஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

வடமாநில தொழிலாளர்களை சந்தித்தார்

அதைத்தொடர்ந்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கோவை சரவணம் பட்டி, கருமத்தம்பட்டியில் உள்ள மில்களுக்கு நேரில் சென்றார்.

அவர், அங்கு வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து தமிழக அரசு உங்களுக்கு அனைத்து பாதுகாப்பையும் அளிக்கும் என்று உறுதி அளித்தார். அத்துடன் உங்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறதா என்றும் கேட்டறிந்தார்.

மேலும் செய்திகள்