சாத்தான்குளம் கொலை வழக்கு: 3 மாதங்களில் விசாரணையை முடிக்க மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-05-24 14:57 GMT

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் சாத்தான்குளம் காவல்நிலைய போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்று தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி காவல் ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை விரைவாக நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் எனக்கோரி உயிரிழந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி, மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இன்னும் இந்த வழக்கில் ஒரே ஒரு சாட்சியிடம் மட்டும் விசாரணை நடத்த வேண்டியிருப்பதாகவும், விசாரணை விரைவில் முடிந்துவிடும் என்றும் தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்