சத்தியவாகீஸ்வரர் கோவில் வைகாசி திருவிழாவில் நடராஜர் பச்சை சாத்தி வீதி உலா

களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவில் வைகாசி திருவிழாவில் நடராஜர் பச்சை சாத்தி வீதி உலா நடந்தது.

Update: 2023-05-31 20:01 GMT

களக்காடு:

களக்காடு சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் சுவாமி, அம்பாள் ஏக சிம்மாசன வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், கும்பாபிஷேகமும், இரவில் சிறப்பு அலங்கார தீபாராதனைகளுக்கு பின்னர் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருதலும் நடந்து வருகிறது.

விழாவின் 8-ந் திருநாளான நேற்று நடராஜர் பச்சை சாத்தி எழுந்தருளும் வைபவம் நடந்தது. இதனை முன்னிட்டு காலை 10 மணிக்கு நடராஜர், சிவகாமி அம்பாள், கங்காளநாதர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து நடராஜர் பச்சை பட்டு உடுத்தி, முழுவதும் பச்சை சாத்தி வாகனத்தில் எழுந்தருளி, ஆரல்வாய்மொழி, அரியநாயகிபுரம் சிவனடியார்கள் சிவ வாத்தியங்கள் முழங்க திருவீதி உலா வந்தார். வாகனம் பச்சை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. நடராஜர் கோவிலை வந்தடைந்ததும் சிறப்பு தீபாராதனைகள் இடம்பெற்றது. அதன் பின் இரவில் கங்காளநாதர், பிச்சாண்டவர் கோலத்தில் எழுந்தருளினார், சந்திரசேகர் சுவாமிகளும், சத்தியவாகீஸ்வரர் பூங்கோயில் வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் வீதிஉலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்