கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவன் சாவு

திருமயம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவன் இறந்தார்.;

Update:2023-02-27 23:32 IST

பள்ளி மாணவன்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே லெம்பலக்குடி தண்ணீர்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் கருப்பையா (வயது 16). இவர், நச்சாந்துபட்டியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். முத்தையாவின் வீட்டின் அருகே விவசாய கிணறு உள்ளது.

இந்நிலையில் நேற்று மதியம் கருப்பையா டீ குடித்துவிட்டு டம்ளரை கழுவ கிணற்றில் இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கிணற்றுக்குள் விழுந்தார். நீச்சல் தெரியாததால் உயிருக்கு போராடிய கருப்பையா கிணற்றில் மூழ்கினார்.

பிணமாக மீட்பு

இதையடுத்து நீண்ட நேரம் ஆகியும் கருப்பையா வீட்டிற்கு வராததால் தேடி முத்தையா கிணற்று பகுதிக்கு சென்று அவரை தேடி பார்த்தார். அப்போது அங்கு அவரை காணவில்லை. இதையடுத்து தனது மகன் கிணற்றில் தவறி விழுந்து மூழ்கி இருக்கலாம் என்று நினைத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியோடு கிணற்றில் இறங்கி தேடினர்.

பின்னர் கருப்பையாவை கிணற்றில் இருந்து சடலமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அப்போது அங்கிருந்த அவரது உறவினர்கள் கருப்பையாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நமணசமுத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கருப்பையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிேசாதனைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்