பள்ளி வளாகத்துக்குள் வெட்டப்பட்ட மரங்கள் அகற்றப்படாமல் உள்ளன

Update:2023-09-26 22:28 IST


திருப்பூர் அருகே பள்ளி வளாகத்துக்குள் வெட்டப்பட்ட மரங்கள் அகற்றப்படாமல் உள்ளதால் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் காரணமாக குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனடியாக கலெக்டர் நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளி வளாகத்துக்குள் மரங்கள்

திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட கரைப்புதூரில் உள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கிலம் வழி கல்வியை 270 மாணவ-மாணவிகள் 5 வகுப்பறைகளில் படித்து வருகின்றனர். போதிய வகுப்பறைகள் இல்லாததால் ரூ.92 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பீட்டில் கூடுதலாக 6 வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. புதிய வகுப்பறைகள் கட்ட பள்ளி வளாகத்திற்குள் இடையூறாக இருந்த மரங்கள் சுமார் ஆறு மாதங்களுக்கு முன் வெட்டப்பட்டன.

அதனை கடந்த 18-7-23 அன்று பொது ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது ரத்து செய்யப்பட்டது. வெட்டப்பட்ட மரங்கள் இதுவரைக்கும் அகற்றப்படாமல் உள்ளது.

பாதுகாப்பற்ற சூழ்நிலை

இது குறித்து பெற்றோர்கள் கூறுகையில், புதிய வகுப்பறைகள் கட்ட பள்ளி வளாகத்திற்குள் இடையூறாக இருந்த மரங்கள் வெட்டப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. வெட்டப்பட்ட மரங்கள் கடந்த ஜூலை மாதம் ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அதுவும் ரத்து செய்யப்பட்டன. அதற்கு பிறகு இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது மரங்களுக்குள் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளது. இதனால் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கவனத்திற்கு பல முறை கொண்டு சென்றும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பள்ளி வளாகத்திற்குள் வெட்டப்பட்ட மரங்களை உடனடியாக அகற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்