ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு

சேரன்மாதேவி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-03-04 01:13 IST

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர்.

வீட்டு வாசலில் சூடம் கொளுத்தியபோது...

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே கூனியூர் சமாது கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வபெருமாள் (வயது 48). இவருடைய மகன் ஹரிகரசுதன். இவர் நேற்று முன்தினம் இரவில் திருஷ்டி கழிப்பதற்காக தனது வீட்டு வாசலில் சூடம் கொளுத்தினார்.

அப்போது அங்கு வந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த வேலு மகன் அய்யப்பன் (36) மதுபோதையில் செல்வபெருமாளை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை செல்வபெருமாள் தட்டி கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது செல்வபெருமாள் கீழே விழுந்தார்.

4 பேருக்கு அரிவாள் வெட்டு

இதனைப் பார்த்த செல்வபெருமாளின் தந்தை சுப்பிரமணியன் (74) அரிவாளால் அய்யப்பனை வெட்டினார். இதனை தடுக்க முயன்ற அய்யப்பனின் தாயார் முத்துலட்சுமி (58), அக்காள் மஞ்சு (37), தம்பி மணிகண்டன் (32) ஆகியோரையும் சுப்பிரமணியன் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த அய்யப்பன் உள்ளிட்ட 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சேரன்மாதேவி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தந்தை-மகன் கைது

இதுகுறித்த புகாரின்பேரில், சேரன்மாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியன், அவருடைய மகன் செல்வபெருமாள் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்