காலாவதியான உணவு பாதுகாப்பு உரிமத்துடன் இயங்கிய பேக்கரிக்கு 'சீல்' வைப்பு

வேம்பாரில் காலாவதியான உணவு பாதுகாப்பு உரிமத்துடன் இயங்கிய பேக்கரிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

Update: 2023-02-02 18:45 GMT

வேம்பாரில் காலாவதியான உணவு பாதுகாப்பு உரிமத்துடன் இயங்கிய பேக்கரிக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

வேம்பாரில் சோதனை

தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில், புதூர், விளாத்திகுளம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் ஆகியோர் வேம்பாரில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அந்த பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் உணவு பாதுகாப்பு உரிமம் காலாவதியான பிறகும், தொடர்ந்து இயங்கி வருவது கண்டறியப்பட்டது. மேலும் அந்த பேக்கரியில் உரிய லேபிள் விவரங்கள் இன்றி விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த ரொட்டி, சேவு உள்ளிட்ட 30 கிலோ உணவுப் பொருள் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பேக்கரிக்கு 'சீல்' வைப்பு

அந்த பேக்கரியில் பொதுமக்களின் பொது சுகாதார நலனுக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் அதீத சுகாதாரக் குறைபாடுகள் காணப்பட்டது. எனவே, உடனடியாக அந்த பேக்கரி மூடி 'சீல்' வைக்கப்பட்டது. இதே போன்று அந்த பகுதியில் காலாவதியான உணவு பாதுகாப்பு உரிமத்துடன் இயங்கி வந்த மளிகை கடையும் மூடப்பட்டது.

எனவே, உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் இல்லாமல் உணவு வணிகம் புரியும் உணவு சம்பந்தப்பட்ட வணிகர்கள், சட்ட நடவடிக்கைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, உடனடியாக உணவு பாதுகாப்பு உரிமத்தை பெறுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர் என்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்