இளம் வக்கீல்களின் வளர்ச்சிக்கு மூத்த வக்கீல்கள் உதவியாக இருக்க வேண்டும் - ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வலியுறுத்தல்

இளம் வக்கீல்களின் வளர்ச்சிக்கு மூத்த வக்கீல்கள் பல்வேறு உதவிகளை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி வலியுறுத்தி பேசினார்.

Update: 2023-05-18 21:28 GMT


இளம் வக்கீல்களின் வளர்ச்சிக்கு மூத்த வக்கீல்கள் பல்வேறு உதவிகளை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி வலியுறுத்தி பேசினார்.

பிரிவு உபசார விழா

சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, இந்த மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார். அவருக்கு மதுரை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கங்கள் சார்பில் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. விழாவில் எம்.பி.ஏ. வக்கீல் சங்க பொதுச்செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். மகா வக்கீல் சங்கத்தலைவர் ராமகிருஷ்ணன், எம்.எம்.பி.ஏ. சங்க பொதுச்செயலாளர் கே.பி.நாராயணகுமார், எம்.பி.எச்.ஏ.ஏ. செயலாளர் அன்பரசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பின்னர் ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா ஏற்புரை வழங்கி பேசியதாவது:- வக்கீல்கள் தங்களின் பணிச்சுமை காரணமாக நூலகத்திற்கு செல்ல முடியாவிட்டாலும் கூட, தங்களின் வழக்கு விசாரணைக்கு வரவில்லை என்றாலும் கோர்ட்டுக்கு சென்று பிற வழக்கு விசாரணைகளில் இரு தரப்பு வாதங்களையும் கவனிக்க வேண்டும்.

இளம் வக்கீல்கள்

தனது வழக்கின் சாராம்சத்தை சுருக்கமாகவும், நீதிபதிக்கு எளிதில் புரியும்படியும் வாதாடுபவர்தான் சிறந்த வக்கீல். கோர்ட்டு நேரத்தை ஒரு வழக்கிற்காகவே செலவிடாமல் வக்கீல்கள் சுருக்கமாக வாதாடுவதை வழக்கமாக கொள்ள வேண்டும். மூத்த வக்கீல்கள், இளம் வக்கீல்களின் வளர்ச்சிக்கு தொழில் ரீதியாக பல்வேறு உதவிகளை செய்வது அவசியம். வக்கீல் தொழிலுக்கு மட்டும்தான் பணி ஓய்வு என்பதே கிடையாது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் நீதிபதிகள் தாரணி, ராமகிருஷ்ணன், விக்டோரியா கவுரி, வடமலை, கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்கரன், அரசு பிளீடர் திலக்குமார் மற்றும் அரசு வக்கீல்கள், வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முடிவில் பெண் வக்கீல்கள் சங்க பொதுச்செயலாளர் கிருஷ்ணவேணி நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்