பரமக்குடியில் கடையடைப்பு
மாணவி பலாத்கார வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக்கோரி பரமக்குடியில் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பரமக்குடி,
மாணவி பலாத்கார வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக்கோரி பரமக்குடியில் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடையடைப்பு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவியை பரமக்குடி வைகை நகரை சேர்ந்த 3-வது வார்டு கவுன்சிலர் சிகாமணி, புதுநகரை சேர்ந்த பிரபாகரன், மாதவன் நகரை சேர்ந்த ராஜா முகம்மது ஆகியோர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவர்களுக்கு சிகாமணியின் நிறுவனத்தில் பணியாற்றி வந்த கயல்விழி, உமா ஆகிய பெண்கள் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி கொடுத்த புகாரின்பேரில் பரமக்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர்.
இந்தநிலையில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பரமக்குடி ஆயிர வைசிய சபை மற்றும் பரமக்குடி வியாபாரிகள் சங்கம், அனைத்து வியாபாரிகள் சார்பில் நேற்று பகல் 11 மணி முதல் 1 மணி வரை கடையடைப்பு நடந்தது. காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டம்
இதற்கு ஆயிர வைசிய சபை தலைவர் ராசி போஸ் தலைமை தாங்கினார். இணை தலைவர் பாலுசாமி முன்னிலை வகித்தார். ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி தாளாளர் லெனின் குமார் வரவேற்றுப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட போலீசாருக்கு நன்றி தெரிவித்தும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டன.
வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மணிவண்ணன், ஜீவானந்தம், வன்னியர் குல சத்திரியர் சங்க தலைவர் மனோகரன், ராமலிங்க விலாஸ் தொடக்கப்பள்ளி தாளாளர் நாகராஜன், வக்கீல்கள் சவுமிய நாராயணன், தினகரன் உள்பட பலர் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வியாபாரிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவியின் படிப்பு செலவு அனைத்தையும் பசும்பொன்னார் கல்வி அறக்கட்டளை சார்பில் அதன் தலைவர் குமாரக்குறிச்சி கே.பி.நாகராஜ் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். மேலும் அந்த மாணவியின் குடும்பத்திற்கு முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஜெகநாதன் நிதி உதவி வழங்கினார்.