கொடைக்கானல் அருகே தோட்டத்தில் தோண்டி எடுக்கப்பட்ட வனவிலங்குகளின் எலும்புக்கூடுகள்

கொடைக்கானல் அருகே, தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த வனவிலங்குகளின் எலும்புக்கூடுகளை வனத்துறையினர் தோண்டி எடுத்தனர். இதுதொடர்பாக ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update:2023-03-08 02:00 IST

கொடைக்கானல் அருகே, தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த வனவிலங்குகளின் எலும்புக்கூடுகளை வனத்துறையினர் தோண்டி எடுத்தனர். இதுதொடர்பாக ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

தோட்டத்தில் சோதனை

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள புது ஆயக்குடியை சேர்ந்தவர் அப்துல்ரசாக். இவர், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவராக இருந்தார். அப்துல்ரசாக்குக்கு சொந்தமான தோட்டம், கொடைக்கானல் தாலுகா பெரும்பள்ளம் வனச்சரகத்துக்கு உட்பட்ட செம்பராங்குளத்தில் உள்ளது.

இந்த தோட்டத்தில் மின்வேலிகள் அமைத்து வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக திண்டுக்கல் வன பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் திலீப், உதவி வன பாதுகாவலர் சக்திவேல் உத்தரவின்பேரில், வனச்சரகர் குமரேசன் தலைமையிலான வனத்துறையினர் செம்பராங்குளத்தில் உள்ள தோட்டத்தில் நேற்று சோதனை நடத்தினர்.

வனவிலங்குகளின் எலும்புக்கூடுகள்

மேலும் தோட்டத்தில் சந்தேகப்படும் வகையில் இருந்த பகுதியில் குழித்தோண்டி பார்த்தனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது தோண்டப்பட்ட குழிக்குள் வனவிலங்குகளின் எலும்புக்கூடுகள் இருந்தன. இதையடுத்து பக்கத்தில் மற்றொரு பகுதியிலும் குழித்தோண்டி பார்த்தனர். அதிலும் விலங்குகளின் எலும்புக்கூடுகள் இருந்தன.

மேலும் சில இடங்களிலும் வனவிலங்குகளின் எலும்புக்கூடுகளை வனத்துறையினர் தோண்டி எடுத்தனர். காட்டெருமை, கடமான், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி உள்ளிட்ட விலங்குகளின் எலும்புக்கூடுகள் சிக்கின.

இதையடுத்து தோண்டி எடுக்கப்பட்ட வனவிலங்குகளின் எலும்புக்கூடுகளை வனத்துறையினர் கைப்பற்றி, அவற்றை பரிசோதனைக்காக கால்நடை மருத்துவ ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

3 பேருக்கு வலைவீச்சு

மேலும் இதுதொடர்பாக தோட்டத்தின் உரிமையாளர் அப்துல்ரசாக், அவரது தந்தை முகமது அப்பாஸ்ஒலி, தோட்ட தொழிலாளி பாலமுருகன் ஆகிய 3 பேர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அப்துல்ரசாக்கின் தோட்டத்தில் மின்வேலி அமைத்து பல நாட்கள் வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டுள்ளன. அவ்வாறு வேட்டையாடப்பட்ட வனவிலங்குகளின் எலும்புக்கூடுகள் தற்போது தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. வனவிலங்குகளை கொன்று அவற்றின் இறைச்சியை எடுத்துவிட்டு எலும்புக்கூடுகள் மட்டும் தான் புதைக்கப்பட்டதா? அல்லது வனவிலங்குகள் உடல்கள் புதைக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தோட்டத்தில் இன்னும் பல்வேறு இடங்கள் தோண்டப்பட்டு சோதனை நடத்தப்படும். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றார். வனவிலங்குகளின் எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் கொடைக்கானல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்