மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க பள்ளிகளில் சிறப்பு முகாம் கலெக்டர் தகவல்
மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.;
ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியுடன் இணைந்து, அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க சிறப்பு முகாமுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி மாணவர்கள், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.
ஏற்கனவே மாவட்டத்தில் 22 ஆயிரத்து 492 மாணவர்கள் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாமல் இருந்ததால், அவர்களுக்காக பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தி 2,620 பேருக்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 19 ஆயிரத்து 872 மாணவர்களுக்கு வருகிற 25-ந் தேதிக்குள் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்கப்பட வேண்டும்.
சிறப்பு முகாம்கள்
இதற்காக பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் மட்டுமில்லாமல், அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கலாம். தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பபோமெட்ரிக் சாதனத்தின் மூலம் மாணவர்கள் தங்களின் ஆதார் மற்றும் செல்போன் எண்ணை மட்டும் பயன்படுத்தி விரல்ரேகை மூலம் ஒரு சில நிமிடங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்க முடியும்.
மேற்கண்ட தகவல் கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.