டாஸ்மாக் கடை விற்பனையாளருக்கு கத்திக்குத்து
கிணத்துக்கடவு அருகே டாஸ்மாக் கடை விற்பனையாளரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே டாஸ்மாக் கடை விற்பனையாளரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
டாஸ்மாக் கடை
பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துகுளி மீன்கரை ரோடு பகுதியை சேர்ந்தவர் நாகமாணிக்கம்(வயது 51). இதேபோன்று கோட்டூரை சேர்ந்தவர் ஆனந்தகுமார்(49). இவர்கள் கிணத்துக்கடவு தாலுகா முள்ளுப்பாடி ெரயில்வே கேட் அருகே சூலக்கல் செல்லும் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் நாகமாணிக்கம் நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் பணிகளை முடித்துவிட்டு, கடைக்கு அருகில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை எடுக்க சிறிது தூரம் நடந்து சென்றார்.
கத்திக்குத்து
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் நாகமாணிக்கத்தை வழிமறித்து கிணத்துக்கடவு செல்வதற்கு வழி கேட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த அவர், நீங்கள் யார், எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார். உடனே அந்த மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நாகமாணிக்கத்தின் கையில் குத்தினார். உடனே அவர் கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு கடையில் இருந்து ஆனந்தகுமார் ஓடி வந்தார். அதற்குள் 2 வாலிபர்களும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
தீவிர விசாரணை
இதையடுத்து படுகாயம் அடைந்த நாகமாணிக்கத்தை அவர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் சம்பவம் நடந்த பகுதியை பார்வையிட்டு, தப்பி ஓடிய 2 வாலிபர்களை வலைவீசி வருகின்றனர்.