அரசு பள்ளிகளில் மாணவர்களை கூடுதலாக சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களை கூடுதலாக சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் வளர்மதி கூறினார்.

Update: 2023-07-11 17:15 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களை கூடுதலாக சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் வளர்மதி கூறினார்.

ஆய்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் பள்ளி மாணவ- மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மாணவ மாணவிகளின் தேர்ச்சி விகிதம் நடப்பாண்டில் கட்டாயம் அதிகமாக இருக்க வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் கற்பிக்கும் முறையினை நல்ல முறையில் மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து நிலை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் இதில் தனிகவனம் செலுத்தி அவ்வப்போது பள்ளிகளில் ஆய்வு செய்து மாணவர்களின் தேர்ச்சி விகிதங்களை கண்காணித்து தேர்ச்சி விகிதங்களை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

தகவல் தெரிவிக்க வேண்டும்

பள்ளி அருகில் பெட்டி கடைகள், மற்ற இடங்களில் கஞ்சா போதை வஸ்துக்கள் மாணவர்களுக்கு விற்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க பள்ளி ஆசிரியர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.

தகவல் வரும் பட்சத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து தலைமை ஆசிரியர்களும் இந்த தகவல்களை கூட்டம் நடத்தி மற்ற ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

தனியார் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் மொபட், மோட்டார் சைக்கிளில் பள்ளிகளுக்கு வருவது தெரிய வருகிறது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திற்கு முறையான தகவல் தெரிவித்து மாணவ-மாணவிகள் இருசக்கர வாகனங்களில் தனியாக ஓட்டி வருவதை தடுக்க வேண்டும்.

மாணவர்கள் சேர்க்கை

அங்கன்வாடி பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் அரசு பள்ளியில் சேர்வதில்லை என தெரிய வருகிறது. அதற்கான காரணங்களை கண்டறிந்து அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் பள்ளி மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பது வருந்தத்தக்கது.

பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில் புதர்கள், புல்வெளிகள் மண்டி கிடந்தால் அதை சுத்தம் செய்ய 100 நாள் வேலை பணியாளர்களை பயன்படுத்த வேண்டும்.

1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு கற்றல் அறிவை அதிகரிக்க ஆசிரியர்கள் அதற்கு தேவையான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், தலைமை ஆசிரியர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர்கள் சுப்பராவ் (இடைநிலைக் கல்வி), பிரேமலதா (தொடக்கக் கல்வி), மோகன் (தனியார் பள்ளிகள்) மற்றும் அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்