முதன்மை நகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்

திருப்பத்தூரை முதன்மை நகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என என நகராட்சி கூட்டத்தில் தலைவர் சங்கீதா வெங்கடேஷ் தெரிவித்தார்.;

Update:2023-08-31 23:22 IST

நகராட்சி கூட்டம்

திருப்பத்தூர் நகராட்சி கூட்டம், நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ் தலைமையில் நடந்தது. ஆணையாளர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் ஏ.ஆர்.சபியுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:-

கவுன்சிலர் வெற்றிகொண்டான் (வி.சி.க.):- எனது வார்டின் பெரும்பகுதி கிராம பஞ்சாயத்தில் இருந்து சேர்க்கப்பட்ட பகுதியாக உள்ளது. அதில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. குப்பைகள் அள்ளப்படுவதில்லை. ஆனால் குப்பைக்கான வரி கட்டுகிறோம். தண்ணீர் வருவதில்லை, தண்ணீருக்கான வரி செலுத்துகிறோம். அதிகாரிகள் எதையும் கண்டு கொள்வதில்லை.

டிடிசி.சங்கர் (அ.தி.மு.க.):- அவ்வை நகர் பகுதியில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு இன்னும் திறக்கப்பட வில்லை. சின்ன மேஸ்திரி நகர் பகுதியில் ஆழ்துளை கிணறு பழுதாகி விட்டது. நகராட்சி பள்ளி கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அசம்பாவிதம் நடப்பதற்கு முன் பள்ளி கட்டிடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். எப்போது கேட்டாலும் கமிஷனர் இல்லை, பொறியாளர் இல்லை என்றே பதிலளிக்கின்றீர்கள். அவர்கள் இல்லையென்றால் நிர்வாகம் நடத்த முடியாதா?. இந்த கோரிக்கையை சொல்லும்போதெல்லாம் சரிசெய்யப்படும் என்கிறீர்கள். நீங்கள் செய்து முடிப்பதற்குள் எங்கள் கவுன்சிலர் பதவிக் காலம் முடிந்து விடும் போல் உள்ளது.

முதன்மை நகராட்சியாக

டாக்டர் வினோதினி (அ.தி.மு.க.):- திருப்பத்தூர்- சேலம் மெயின் ரோட்டில் உள்ள டி.எம்.சி. காலனி பகுதியில் தூய்மை பணியாளர்கள் குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளார்கள். பைப் லைன் அமைத்து அவர்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வி.பிரேம்குமார் (தி.மு.க.):- 7- வது வார்டு பகுதியில் 3 ஆழ்துளை கிணறுகளின் மோட்டார் பழுதாகி உள்ளது. அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

கே.குப்பம்மாள் (தி.மு.க.):- 1-வது வார்டு தென்றல் நகர் பகுதியில் தெருவிளக்குகள், சாலைகள் அமைத்துத்தர வேண்டும்.

நகராட்சி தலைவர்:- திருப்பத்தூர் நகராட்சிக்கு புதிய ஆணையாளர் மற்றும் பொறியாளர் வந்துள்ளனர். இனி அனைத்து வேலைகளும் முழு வேகத்தில் நடைபெற்று திருப்பத்தூர் நகராட்சியை முதன்மை நகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்