ரேஷன் அரிசி கடத்தல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை

தமிழக-கேரள போலீசார் இணைந்து ரேஷன் அரிசி கடத்தல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்தனர்.;

Update:2022-06-14 20:25 IST

பொள்ளாச்சி

தமிழக-கேரள போலீசார் இணைந்து ரேஷன் அரிசி கடத்தல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்தனர்.

ஆலோசனை கூட்டம்

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் விலையில்லா அரிசியை பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி கடத்தல்காரர்கள் கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஆபாஷ்குமார் ஆகியோர் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

இந்த நிலையில் பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், கோவை மாவட்ட வழங்கல் அதிகாரிகள் மற்றும் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்ட வாளையார், கொழிஞ்சாம்பாறை போலீஸ் நிலைய அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கடும் நடவடிக்கை எடுக்க முடிவு

கூட்டத்தில், தமிழக மற்றும் கேரள எல்லையோர பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய குற்றவாளிகள் மீது இருக்கும் வழக்குகளை விசாரித்து விரைவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தண்டனை பெற்று கொடுக்க வேண்டும்.

கடத்தல் சம்பவங்களில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்வதற்கு தமிழக-கேரள என இருமாநில போலீஸ் அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் இனி வரும் காலங்களில் குற்றங்கள் நடைபெறாமல் இருக்க விரைந்து செயல்பட வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்